மஜிக சாறு
தேவையானவை: தயிர் - ஒரு கப், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய கொத்துமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - தேவைக்கு, கறிவேப்பிலை - ஒரு கொத்து, பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் - தலா ஒன்று.
செய்முறை:
தயிரை சிலுப்பி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, சீரகம், வெந்தயம் சேர்த்து பொரிய விடவும். பின்னர் நறுக்கிய பச்சைமிளகாய், கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்து சற்றே நிறம் மாறும் வரை வதக்கி, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து இறக்கவும். கலவை சற்றே ஆறியதும் தயிருடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பைக் கலந்து, கொத்துமல்லித்தழையைத் தூவி, சூடான சாதத்துடன் பரிமாறவும்.
குறிப்பு: வெங்காயம் லேசாக வதங்கினாலே போதும். வேண்டுமென்றால் சிறிய துண்டு இஞ்சியையும் சேர்த்து வதக்கலாம்.
ஆவக்காய் ஊறுகாய்
தேவையானவை: கெட்டியான புளிப்பு மாங்காய் - 3, மிளகாய்த்தூள் - முக்கால் கப், உப்பு கால் கப்புக்கும் கொஞ்சம் அதிகமாக, கடுகு - அரை கப், வெந்தயம், பெருங்காயம் - தலா ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு கப்.
செய்முறை: மாங்காயை நன்றாகக் கழுவி, சதுரங்களாக விதையுடன் நறுக்கவும். பின்னர்
ஒரு துளிக்கூட தண்ணீர் இல்லாதவாறு, மாங்காய்த் துண்டுகளை, சுத்தமான துணியால் துடைக்கவும். வெறும் வாணலியில் கடுகை போட்டு, சூடாகும் வரை வறுத்து ஆறவைத்து, மிக்ஸியில் போட்டு சற்றே கொரகொரப்பாகப் பொடிக்கவும். அதேபோல் வெந்தயத்தையும் வெறும் வாணலியில் போட்டு, சூடாகும் வரை வறுத்து, நன்றாக ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில், பொடித்த கடுகு, வெந்தயம், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். இதுதான் 'ஆவக்காய் பொடி, கண்ணாடி பாத்திரம் அல்லது ஊறுகாய் ஜாடியில் மாங்காய்த் துண்டுகள், ஆவக்காய் பொடி, பெருங்காயம், எண்ணெய் சேர்த்து, ஈரமில்லாமல் நன்றாக உலர்ந்த ஸ்பூனால் கலந்து விட்டு, மூடி வைக்கவும். தினமும் ஒரு முறை என நான்கு நாட்கள் ஸ்பூனால் நன்றாகக் கலந்து விடவும். மாங்காய் நன்றாக ஊறி, மிருதுவாக நான்கு நாட்கள் தேவை. எனவே அதன் பிறகு உபயோகிக்கலாம்.
தந்தி வன்காய் கூற
தேவையானவை: பிஞ்சு கத்தரிக்காய், சின்ன வெங்காயம் - தலா 10, எண்ணெய், உப்பு தேவைக்கு, பூண்டு - 2 பல், புளி - சிறிதளவு.
வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், வரமிளகாய் - 8, வெந்தயம் - கால் டீஸ்பூன்.
செய்முறை: கத்தரிக்காயை + வடிவில் நான்காகக் கீறி, தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போடவும். வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் சற்றே பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும். அதே வாணலியில் எண்ணெய் விட்டு, உரித்த சின்ன வெங்காயம், பூண்டு, புளி சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து மையாக அரைக்கவும். இதுதான் 'குந்தி வன்காய மசாலா'. இந்த மசாலாவை, நான்காக கீறி வைத்துள்ள, ஒவ்வொரு கத்தரிக்காயிலும் ஸ்டஃப் செய்யவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, ஸ்டஃப் செய்து வைத்துள்ள கத்தரிக்காயை ஒன்றன் பின் ஒன்றாக வைத்து, அடுப்பை மிதமான தீயில் 15 முதல் 18 நிமிடம் வரை மூடி வைத்து, வேக விடவும். கத்தரிக்காய் நன்றாக வெந்ததும், மீதமுள்ள மசாலா கலவை, அரை கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து, சற்றே கெட்டியாக கிரேவி பதம் வந்ததும் இறக்கவும்.
ஆந்திரா இட்லி
தேவையானவை: உளுந்தம் பருப்பு - ஒரு கப், இட்லி ரவை 2 கப், உப்பு - தேவைக்கு.
செய்முறை: இட்லி ரவையை 3 மணி நேரம் தண்ணீரில்
ஊற வைக்கவும். உளுந்தம் பருப்பையும் தனியாக 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, பொங்கப் பொங்க, மிக்ஸியிலோ கிரைண்டரிலோ அரைக்கவும். ஊறவைத்த இட்லி ரவையை நன்றாகப் பிழிந்து, அரைத்த உளுந்து மாவுடன் கலக்கவும். பின்னர் உப்பைச் சேர்த்து நன்றாகக் கலந்து, 8 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க விடவும். மாவு நன்றாகப் புளித்ததும், இட்லித் தட்டில் இட்லிகளாக ஊற்றி, ஆவியில் 10. 12 நிமிடம் வேகவிடவும். சட்னி அல்லது சாம்பாருடன் சூடாகப் பரிமாறவும்.
கந்தி பச்சடி
தேவையானவை: துவரம் பருப்பு - அரை கப், மிளகு - அரை டீஸ்பூன், வரமிளகாய் 4, பூண்டு - 4 பல், தேங்காய்த்துருவல் - கால் கப், உப்பு - தேவைக்கு.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுந்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை ஒரு கொத்து,
செய்முறை:
வெறும் வாணலியில் துவரம் பருப்பு, மிளகு, வரமிளகாயை ஒன்றாகப்போட்டு, பருப்புகள் சற்று பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து, அதே வாணலியில் சூடு இருக்கும்போதே பூண்டு, தேங்காய்த்துருவல் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து, சற்றே ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகை தாளித்து, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து, பருப்பு சற்றே பொன்னிறமானதும், அரைத்து வைத்துள்ள பச்சடியில் சேர்க்கவும். இட்லி, தோசை, பணியாரம் என்று எதனுடன் வேண்டுமானாலும் இந்த பச்சடியை சேர்த்துச் சாப்பிடலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக