பம்கின் சீட் - ஸ்பினாச் சூப்&சாரைப்பருப்பு பச்சடி&நியூட்ரி மிக்ஸ் பவுடர்&சாரைப்பருப்பு அல்வா&வெள்ளரி விதை சப்பாத்தி&வெள்ளரி விதை பாயசம்
பம்கின் சீட் - ஸ்பினாச் சூப்
தேவையானவை:
பறங்கி விதை - 1/4 கப், பசலைக்கீரை 1 கட்டு, பால் - 2 கப், வெங்காயம் - 1, பூண்டு - 4 பற்கள், வெண்ணெய் - 4 ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - சுவைக்கேற்ப.
செய்முறை: பறங்கி விதையை ஊறவைத்து, பால் சேர்த்து, கரகரப்பாக
அரைக்கவும். 2 ஸ்பூன் வெண்ணெயை கடாயில் சேர்த்து, பசலைக்கீரை, வெங்காயம், உரித்த பூண்டு சேர்த்து வதக்கி, பால் சேர்த்து அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில், அரைத்த பறங்கி விதை, அரைத்த கீரை, மீதமுள்ள பால், தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவைக்கவும். மீதமுள்ள வெண்ணெயை மேலாகச் சேர்த்து, சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு: இதனுடன் பிரெட் துண்டுகள் வைத்து, இரவு உணவாகப் பரிமாறலாம்!
சாரைப்பருப்பு பச்சடி
தேவையானவை: சாரைப்பருப்பு 1/4 கப், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா 1/4 ஸ்பூன், முள்ளங்கி - 1, புளிக்காத கெட்டித்தயிர் - 1 கப், சர்க்கரை - 2 சிட்டிகை, உப்பு - தேவைக்கு, கொத்தமல்லித்தழை
அலங்கரிக்க.
செய்முறை: தண்ணீர் சேர்க்காமல் தயிரைக் கடைந்து, தேவையான அளவு உப்பு, 2 சிட்டிகை சர்க்கரை சேர்த்து, கலந்துவைக்கவும். சாரைப்பருப்பை ஊறவைத்து, விழுதாக அரைத்து, தயிருடன் சேர்க்கவும். பின்னர் முள்ளங்கியைத் துருவி சேர்க்கவும், இறுதியாக, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து, கொத்தமல்லித்தழையால் அலங்கரித்துப் பரிமாறவும்
நியூட்ரி மிக்ஸ் பவுடர்
தேவையானவை:
பறங்கி விதை, வெள்ளரி விதை, கிருணிப்பழ விதை, சூரியகாந்தி விதை, ஆளி விதை,மக்னா விதை, எள், கசகசா தலா 1/4 கப்.
செய்முறை: மேற்காணும் பொருள்கள் அனைத்தையும் தனித்தனியாக வெறும் வாணலியில் போட்டு வறுத்து, ஆறவைக்கவும். பின்னர் ஒன்றாக மிக்ஸியில் போட்டு பொடித்து, சுத்தமான பாட்டிலில் அடைக்கவும்.
குறிப்பு: குருமா, குழம்பு, பொரியல், சப்பாத்தி மாவு, தோசை மாவு என எதில் வேண்டுமானாலும் இந்தப் பொடியைக் கலந்து பயன்படுத்தலாம். சாலட் செய்யும்போது, உப்பு, மிளகுத்தூளுடன், இந்த பவுடர் சேர்த்தும் சாப்பிடலாம். சாதத்தில் இந்தப் பொடியைச் சேர்த்து, பிசைந்து சாப்பிட்டால், ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது!
சாரைப்பருப்பு அல்வா
தேவையானவை:
சாரைப்பருப்பு - 1
கப், தேங்காய்ப்பால்
2 கப், வெல்லம் 1 1/2 கப்,
நெய் - 1/4 கப்.
செய்முறை: சாரைப்பருப்பை ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு, விழுதாக்கவும். இந்த விழுதை, அடிகனமான கடாயில் போட்டு, வெல்லம், தேங்காய்ப்பால் சேர்த்து, அடுப்பில் வைத்து, கைவிடாமல் கிளறவும். இதனுடன் நெய் சேர்த்து, கலவை சுருண்டு வந்ததும், அடுப்பை அணைக்கவும். சாரைப்பருப்பு அல்வா ரெடி
குறிப்பு: தேங்காய்ப்பாலில் இயற்கையாகவே மணமிருப்பதால், வேறு வாசனைப் பொருள்கள் தேவையில்லை. புரதம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த அல்வா இது. உடல் வெப்பத்தை குறைக்க உதவும். சருமத்தில் அரிப்பு, வியர்க்குரு வராமல் தடுப்பதோடு, சருமத்தைப் பளபளப்பாக வைக்கவும் உதவும்!
வெள்ளரி விதை சப்பாத்தி
வெள்ளரி விதை -1/4 கப், கோதுமை மாவு 1கப், இஞ்சி -சிறிய துண்டு, பச்சைமிளகாய் - 3, புதினா - 1 கட்டு, உப்பு, நெய் - தேவைக்கு.
செய்முறை; கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப்
பிசைந்து, மூடிவைக்கவும். மிக்ஸியில் பச்சைமிளகாய், புதினா, உப்பு, இஞ்சி சேர்த்து அரைக்கவும். வெள்ளரி விதையை மிக்ஸியில் தனியாகப் போட்டு, கரகரப்பாகப் பொடிக்கவும். பிசைந்த கோதுமை மாவுடன், பச்சைமிளகாய் விழுது, பொடித்த வெள்ளரி விதை சேர்த்து, பிசைந்து, சமமான உருண்டைகளாக்கவும். பின்னர் சப்பாத்திகளாகத் திரட்டி, சூடனா தவாவில் போட்டு, நெய் ஊற்றி, இருபுறமும் திருப்பிப் போட்டு, வேகவைத்து எடுக்கவும்.
குறிப்பு
நெய்க்குப் பதிலாக எண்ணெய் உபயோகிக்கலாம்.
வெள்ளரி விதை பாயசம்
தேவையானவை:
வெள்ளரி விதை,
பேரீச்சம்பழம் 1/2 கப்,
பால் தலா 1 லிட்டர்,
ஜாதிக்காய்த்தூள் - 2 சிட்டிகை.
செய்முறை: வெள்ளரி விதையை, 1 கப் பாலில் ஊறவைக்கவும்.
இத்துடன், விதை நீக்கிய பேரீச்சம்பழம், 1/2 கப் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இந்த விழுதுடன் மீதமுள்ள பால், ஜாதிக்காய்த்தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து, கொதிக்கவிடவும். தளதளவென கொதிக்கும்போது, அடுப்பை அணைத்து, இறக்கவும். பின்னர் பாயசத்தை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து எடுத்து, ஜில்லென பரிமாறவும்.
குறிப்பு: வெயில் காலத்தில் உற்ற நண்பன் வெள்ளரி விதை, சிறுநீர்ப்பாதையில் வரும் தொற்று, பித்தப்பையில் வரும் கோளாறுகளை நீக்கவல்லது. நார்ச்சத்து, வைட்டமின் 'ஈ', ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளிட்ட சத்துகள் இந்த விதையில் நிறைந்துள்ளன!
கருத்துகள்
கருத்துரையிடுக