கத்தரிக்காய் சட்னி
தேவையானவை: சின்ன சைஸ் கத்தரிக்காய் - 4, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, புளி - கோலி அளவு, கடுகு, வெள்ளை முழு உளுந்தம் பருப்பு - தலா முக்கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்து, தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் இன்னும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், கத்தரிக்காய், தக்காளியை நன்றாக வதக்கி ஆற விடவும். பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, புளி, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். கடுகு, கறிவேப்பிலையை தாளித்துச் சேர்த்து, பரிமாறவும்.
மசாலா இட்லி
தேவையானவை: இட்லி மாவு - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, கறிவேப்பிலை ஒரு கொத்து, மாங்காய்த்தூள் அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், சென்னா மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா முக்கால் டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: மினி இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, வெந்ததும் எடுத்து ஆற வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அடுப்புத் தணலைக் குறைக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி, மிளகாய்த்தூள், சென்னா மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள், மாங்காய்த்தூன், உப்பு சேர்த்து நன்றாகப் பிரட்டவும். பின்னர் இட்லியைச் சேர்த்துக் கிளறி, 5 நிமிடம் கழித்து இறக்கவும், “கேரட் சட்னியுடன் பரிமாறவும்
கருத்துகள்
கருத்துரையிடுக