வெஜிடபிள் ஆம்லெட்
தேவையானவை: பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு - தலா 1/2 கப், மைதா,
சோளமாவு, மல்லித்தழை - தலா 1 டீஸ்பூன், பால் - 1 கப், துருவிய காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், நூல்கோல், பீட்ரூட்) - 1 கப், பச்சைமிளகாய், பெரிய வெங்காயம் - தலா 1, வரமிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள்தூள் - தலா 1/4 டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு - தலா 1/2 டீஸ்பூன், மிளகு-சீரகத்தூள் = 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 20 மில்லி.
செய்முறை: அகலமான பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, மைதா, சோளமாவு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகு-சீரகத்தூள், கரம் மசாலா, இஞ்ஞ சி-பூண்டு விழுது, பொடியாக துருவிய காய்கறிகள், நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை சேர்த்து நன்றாக கலக்கவும். இதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி அடிக்கவும். பால் தேவைப்பட்டால் இன்னும் சிறிது சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். தவாவில் சிறிது எண்ணெய்த் தடவி, ஆம்லெட்டுகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவைத்து எடுத்து, தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும்.
சிப்பி சோஹி
தேவையானவை: பச்சரிசி மாவு
2 கப், பொட்டுக்கடலை மாவு அரை கப், தேங்காய்ப்பால் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் பொரிக்க தேவையான அளவு, சீப்புச் சீடை கட்டை.
செய்முறை: பச்சரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவைக்
கலந்து வைக்கவும். தேங்காய்ப்பாலை சூடுப்படுத்தி, உப்பு சேர்த்து இறக்கி, மாவுடன் சிறிது சிறிதாக ஊற்றிப் பிசையவும். பின்னர் அந்த மாவை சீப்புச் சீடை கட்டையில் தேய்த்து, சிப்பிகளாகத் தட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து, சிப்பிகளை லேசாக மடக்கிப் போடவும். மொறுமொறுவென வெந்ததும், எடுத்து, எண்ணெயை வடித்து பரிமாறவும்.
ட்ரைஃப்ரூட்ஸ் சமோசா
தேவையானவை: மைதா 2 கப், குளிர்ந்த தண்ணீர் 1 கப், உப்பு - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு. ஸ்டஃபிங்குக்கு: பேரீச்சை 8, கிஸ்மிஸ் - 20, டூட்டி ஃப்ரூட்டி - 1/2 கப், பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 6.
செய்முறை:மைதாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து இறுக்கமாகப் பிசைந்து மூடி வைக்கவும். பேரீச்சையின் விதைகளை நீக்கி, பொடியாக நறுக்கவும். முந்திரி, பாதாம், பிஸ்தாவை சிறிதாக ஒடிக்கவும். இதனுடன் கிஸ்மிஸ், டூட்டி ஃப்ரூட்டி, பேரீச்சையைக் கலந்து நெல்லியளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். மைதாவை பெரிய சப்பாத்தி போல் மெல்லிதாக செவ்வகமாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு லேசாக வேகவைத்து எடுக்கவும். ஒரு சப்பாத்தியை மூன்றாக கட் செய்து, அதில் ஒரு ஓரத்தில் ட்ரைஃப்ரூட்ஸ் உருண்டையை அமுக்கி வைத்து, முக்கோணமாக மடித்துக் கொண்டே வரவும். முடிவில் பிரிந்து கொள்ளாமலிருக்க மைதா பேஸ்ட்டை ஒட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு மொறுமொறுப்பாகப் பொரித்தெடுத்து பரிமாறவும்.
களியோடக்கா
தேவையானவை: பச்சரிசி மாவு
1கப், தூள் வெல்லம் அரை கப் (வெல்லத்தைப் பாகு காய்ச்சி, பச்சரிசி மாவில் ஊற்றிப் பிசைந்து, ஒரு நாள் முழுக்க வைக்கவும்), தேங்காய்த்துருவல் 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 1, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: வெல்லம் பச்சரிசி சேர்த்த மாவில் தேங்காய்த்துருவல்,ஏலக்காய்த்தூள் சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து நன்றாக பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து, மாவுக் கலவையை பெரிய சீடைகளாகஉருட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக