கேரட் - பீஸ் குருமா &கேரட் - ஆனியன் ஸ்பைசி சட்னி &கேரட் - பெப்பரி மக்ரோனி &கேப்ஸிகம் ரைஸ்,&கேரட் - மக்ரோனி பாயசம்
கேரட் - பீஸ் குருமா
தேவையானவை: சிறிய சதுரங்களாக நறுக்கிய கேரட் - 1 கப், காய்ந்த வெள்ளை பட்டாணி - 1 கப் (ஊறவைத்து வேகவைக்கவும்), நறுக்கிய வெங்காயம் - 1/2 கப், தக்காளி - 2, பச்சைமிளகாய் - 1, தேங்காய்த்துருவல் - 1/4 கப், இஞ்சி-பூண்டு விழுது 3/4 டீஸ்பூன், கொத்துமல்லித்தழை, கசூரி மேத்தி - சிறிதளவு, சாம்பார்தூள் - ஒன்றரை டீஸ்பூன், கரம் மசாலா - 1 டீஸ்பூன், பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, சோம்பு - 1/4 டீஸ்பூன், முழு முந்திரி - 4, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். பின்னர் கேரட், நறுக்கிய தக்காளி மற்றும் பட்டாணி சேர்த்து வதக்கி, சாம்பார்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தேங்காய்த்துருவல், முந்திரி, மிளகாய், சோம்பு சேர்த்து நன்றாக அரைத்து, 1 கொதித்து கொண்டிருக்கும் குருமாவில் ஊற்றவும். நன்றாக சேர்ந்து வரும்போது, கரம் மசாலா சேர்த்துக் கொதிக்கவிடவும். கொத்துமல்லித்தழை, கசூரி மேத்தி தூவி, கிளறி இறக்கி, சப்பாத்தி / பூரியுடன் பரிமாறவும்.
கேரட் - ஆனியன் ஸ்பைசி சட்னி
தேவையானவை: நறுக்கிய கேரட் - 2, சிறிய வெங்காயம், பூண்டு பற்கள் - தலா 3, உளுந்தம்பருப்பு, தேங்காய்த்துருவல் - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள், கடுகு - 1/4 டீஸ்பூன், புளி - கோலி அளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கேரட் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கி, தனியே தட்டில் வைத்து ஆறவிடவும். அதே கடாயில் மீண்டும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம், உரித்த பூண்டு பற்கள் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் புளி, தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து நன்றாகப் பிரட்டி, அடுப்பை அணைக்கவும். இந்தக் கலவையை மிக்ஸியில் போட்டு, அதனுடன் வதக்கி ஆறவைத்த கேரட், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து, கடுகு தாளித்து பரிமாறவும்.
குறிப்பு: சூடான சாதத்தில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு இந்தத் துவையல் சேர்த்து, பிசைந்து சாப்பிடலாம். இட்லி / தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
கேரட் - பெப்பரி மக்ரோனி
தேவையானவை: கேரட் துருவல் - 1/2 கப், வேகவைத்த
மக்ரோனி - 1 கப், மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா 1/4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, எண்ணெய் - 1 டீஸ்பூன், நெய் - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின்னர் கேரட், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, மக்ரோனி சேர்த்து நன்றாகப் புரட்டி விடவும். இறுதியாக நெய் ஊற்றிக் கிளறி இறக்கவும். கேரட் -
கேப்ஸிகம் ரைஸ்,
தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட்,
குடைமிளகாய், வெங்காயம் தலா 1/2 கப், வேகவைத்த பாசுமதி ரைஸ் - 1 கப், பொடியாக நறுக்கிய பூண்டு 1/2 டீஸ்பூன், நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய் - 1, கொத்துமல்லித்தழை சிறிதளவு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் தலா 1/2 டீஸ்பூன், மஞ்சள்தூள், மாங்காய்த்தூள் - தலா 1/4 டீஸ்பூன், நெய், எண்ணெய் - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
செய்முறை: கடாயில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு, காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சைமிளகாய் மற்றும் குடைமிளகாயைச் சேர்க்கவும். பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து, உப்பு சேர்த்து வதக்கவும். மேலே குறிப்பிட்டுள்ள எல்லா தூள்களையும் சேர்த்து நன்றாகக் கிளறி, கடாயை மூடி, 10 நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். பின்னர், வேகவைத்த பாசுமதி சாதத்தைச் சேர்த்து நன்றாகக் கிளறி, கொத்துமல்லித்தழைத் தூவி இறக்கவும்.
கேரட் - மக்ரோனி பாயசம்
தேவையானவை: தோல் நீக்கி நறுக்கிய கேரட்
4, வேகவைத்த மக்ரோனி - 1 கப், முழு முந்திரி 6, பால் - 1/2 லிட்டர், பாதாம் மிக்ஸ் - 2 டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - தேவைக்கு.
செய்முறை: கேரட், முந்திரியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து
வேகவைத்து, மிக்ஸியில் போட்டு விழுதாக்கவும். காய்ச்சி ஆறவைத்த பாலில் கேரட்-முந்திரி விழுதைச் சேர்த்து கலந்துகொள்ளவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறவும். மக்ரோனி மற்றும் பாதாம் மிக்ஸ் சேர்த்து 5 நிமிடங்கள் கைவிடாமல் கிளறி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து, அடுப்பிலிருந்து இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக