சோயா கிரிஸ்பி ரிப்பன் & மூங்தால் மிக்ஸர் & முந்திரி பக்கோடா & பெப்பர் காராசேவு & கார்ன்ப்ளார் ஓமப்பொடி & புரோட்டின் மிக்ஸர்
சோயா கிரிஸ்பி ரிப்பன்
தேவை: சோயா மாவு - 1 கப், கடலை மாவு, அரிசி மாவு - தலா அரை கப், வெள்ளை என் 1 டீஸ்பூன், வெண்ணெய் (கடாயில் லேசாக சூடாக்கியது) - 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் நன்றாக சலித்துக் கொள்ளவும், நைஸாக அரைத்த பச்சைமிளகாயை விழுது நீர் விட்டு வடிகட்டிக் கொள்ளவும் கொடுத்துள்ளவற்றில் எண்ணெய் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசையவும். இந்த மாவை ரிப்பன் அச்சில் நிரப்பி, நன்றாக காய்ந்த எண்ணெயில் பிழிந்து வேக வைத்து எடுக்கவும்.
மூங்தால் மிக்ஸர்
தேவை: பாசிப்பருப்பு - கால் கிலோ, மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன், தனி மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், நெல்லிக்காய்தூள் - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை தண்ணீரில் உறவிட்டு. நீரை முழுவதுமாக வடித்து, துணியில் பரப்பி காய விடவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, அதில் பாசிப்பருப்பை சிறிது சிறிதாக போட்டு பொரித்தெடுக்கவும். இறுதியாக மஞ்சள்தூள், தனி மிளகாய்தூள், நெல்லிக்காய்தூள், தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு குலுக்கி பரிமாறவும்.
முந்திரி பக்கோடா
தேவை: முந்திரிப் பருப்பு - 200 கிராம், அரிசி மாவு - அரை கப், கடலை மாவு - 1 கப், கறிவேப்பிலை - சிறிதளவு. தனி மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: மேற்கண்ட பொருட்களில் எண்ணெய், கறிவேப்பிலை நீங்கலாக மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாக கலந்து, அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து உதிர் உதிராக பிசைந்து கொள்ளவும். இந்த மாவை மிதமாக காய்ந்த எண்னொயில் கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும். கடைசியாக எண்ணெயில் கறிவேப்பிலையை பொரித்து, முந்திரி பக்கோடாவுடன் கலக்கவும்.
பெப்பர் காராசேவு
தேவை: அரிசி மாவு - 1 கப், கடலை மாவு - கால் கப், ஒன்றிரண்டாக பொடித்த மிளகு - 3 டீஸ்பூன், வெண்ணெய் (கடாயில் லேசாக சூடாக்கியது) - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு-
செய்முறை: எண்ணெய் நீங்கலாக மற்றப் பொருட்களை ஒன்றாக கலந்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, காராசேவு கட்டையை கடாயின் மீது வைத்து, அதில் மாவை கொஞ்சம் கொஞ்சமாக தேய்க்கவும், நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
கார்ன்ப்ளார் ஓமப்பொடி
தேவை: அரிசி மாவு - 1 கப், கார்ன்ப்ளார் மாவு - கால் கப், உருளைக்கிழங்கு 1,ஓமம் - 2 டீஸ்பூன், வெண்ணெய் (கடாயில் லேசாக சூடாக்கியது) - ஒரு டேபிள்ஸ்பூன், சூடான எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: மாவு வகைகளை சலித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசிக்கவும். ஓமத்தில் நீர் விட்டு மிக்ஸியில் அரைத்து நன்கு வடிகட்டவும். கொடுத்த பொருட்களில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்தையும் ஒன்றாக போட்டு, தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து ஓமப்பொடி அச்சில் நிரப்பவும். நன்றாக காயும் எண்ணெயில் பிழிந்து, வேக வைத்து எடுக்கவும் .
புரோட்டின் மிக்ஸர்
தேவை: கொள்ளு, கடலைப் பருப்பு - அரை கப், பொட்டுக்கடலை - கால் கப், வறுத்த பாதாம், வறுத்த முந்திரி - தலா 20, அரிசி மாவு, பொரித்த அவல் - தலா கால் கப், ஓமம் - அரை டீஸ்பூன், கடலை மாவு - கால் கப், கலர் காராபூந்தி - கால் கப், தனி மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பொரித்த கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கொள்ளு, கடலைப் பருப்பு இரண்டையும் தனித்தனியாக ஊறவைத்து, துணியில் உலர்த்தி பொரித்துக் கொள்ளவும். கடாயில் பொட்டுக்கடலையை லேசாக வறுக்கவும். ஓமத்தை அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அகலமான பேசினில் அரிசி மாவு, ஓம நீர், உப்பு சேர்த்து பிசைந்து, ஓமப்பொடி அச்சில் நிரப்பி காய்ந்த எண்ணெயில் பிழிந்து வேக வைத்து எடுக்கவும். பொரித்த ஓமப்பொடியுடன், கலர் காராபூந்தி, மிளகாய்தூள், பெருங்காயத்தூள், வறுத்து வைத்துள்ள மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக