ரசம் வகைகள்
மிளகு ரசம்
தேவையானவை: மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, சீரகம், கடுகு, நெய் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மிளகு, சீரகத்தை பொடித்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து அடுப்பில் வைக்கவும். பின்னர் உப்பு போட்டு கொதிக்கவிடவும். வாணலியில் நெய் விட்டு, மிளகு-சீரக பொடியை வறுத்து ரசத்தில் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் பெருங்காயத்தூளை சேர்த்து கடுகை தாளித்துக் கொட்டி இறக்கவும்.
பைனாப்பிள் ரசம்
தேவையானவை: துவரம் பருப்பு - 100 கிராம், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, பைனாப்பிள் - ஒரு ஸ்லைஸ் (பொடியாக நறுக்கவும்), சாம்பார்ப்பொடி - ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, நெய் - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்துமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியைக் கரைத்து அடுப்பில் வைக்கவும். அதனுடன் சாம்பார்ப்பொடி, உப்பு, பைனாப்பிள் துண்டுகளை சேர்த்து கொதிக்க விடவும். துவரம் பருப்பை குழைய வேகவைத்து, நன்றாக கரைத்து ரசத்துடன் சேர்க்கவும். வாணலியில் நெய் விட்டு கடுகை தாளித்து ரசத்தில் சேர்க்கவும். பின்னர் கொத்துமல்லித்தழை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
மோர் ரசம்
தேவையானவை:
மோர் 500 மில்லி, எண்ணெய், வெந்தயம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தாள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகை போடவும். அது வெடித்ததும் காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, வெந்தயம், மஞ்சள் தூள் சேர்த்து தாளிக்கவும். பின்னர் பெருங்காயத்தூள், மோர், தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
முடக்கத்தான் ரசம்
தேவையானவை: முடக்கத்தான் கீரை ஒரு கைப்பிடி அளவு, ரசப்பொடி - ஒரு டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, நெய் தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம் பருப்பை குழைய வேகவைத்து கரைத்துக் கொள்ளவும். முடக்கத்தான் கீரையை பொடியாக நறுக்கி, நெய்யில் வதக்கிக் கொள்ளவும். புளியைக் கரைத்து அடுப்பில் வைத்து, உப்பு, ரசப்பொடி, வதக்கிய முடக்கத்தான் கீரையை சேர்க்கவும். பின்னர் துவரம் பருப்பு கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும். வாணலியில் நெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூளை தாளித்துக் கொட்டி இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக