கொள்ளு உருண்டைக் குழம்பு
தேவையானவை: கொள்ளு - 200 கிராம், காய்ந்தமிளகாய் - 8, வெங்காயம் - 2, பூண்டு - 6 பல், துவரம்பருப்பு, கறுப்பு உளுந்து - தலா ஒரு கரண்டி, புளி - எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, நல்லெண்ணெய், கடுகு, உளுந்தம்பருப்பு, வெந்தயம், சாம்பார் பொடி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, உளுந்து, கொள்ளு மூன்றையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைத்து களைந்து உப்பு, காய்ந்தமிளகாய் சேர்த்து ஆட்டுக்கல்லில் கெட்டியாக அரைத்து எடுக்கவும். பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, வெங்காயத்தை வதக்கவும். பின்னர் அரைத்த பருப்புக் கலவையை சேர்த்து நன்றாக கிளறி இறக்கி, ஆறியதும் சிறுசிறு உருண்டைகளாக பிடித்து, இட்லித்தட்டில் வேக வைத்து எடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, புளியை கரைத்து ஊற்றவும். பின்னர் சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இப்போது, வேக வைத்த கொள்ளு உருண்டைகளை போட்டு நன்கு கொதித்ததும் இறக்கவும். விரும்பினால் இந்தக் குழம்பில் சிறிதளவு வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்க்கலாம். தென்மாவட்டங்களில் கருவாடு சேர்த்து இந்தக் குழம்பு செய்வார்கள்.
கறுப்பு உளுந்து சாதம்
தேவையானவை; புழுங்கல் அரிசி - ஒரு கப், பூண்டு - 5 பல், முழு சுறுப்பு உளுந்து - முக்கால் கப், நெய் - 2 டீஸ்பூன், ஒன்றிரண்டாக பொடித்த சீரகம், மினகு - தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - அரை மூடி, தேங்காய்த்துருவல் - அரை கப், கிராம்பு - 4, இஞ்சித்துருவல், வெந்தயம் - தலா ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியையும் உளுந்தையும் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் நெய் விட்டு வெந்தயம், பூண்டு, இஞ்சி, சீரக - மிளகுப் பொடி, கிராம்பு, கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். பின்னர் ஊறவைத்த அரிசி உளுந்தைச் சேர்த்து இரண்டரை டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும், உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து குக்கரை மூடி வெயிட் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். 2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். அரை மணி நேரம் கழித்து குக்கரை திறந்து, எலுமிச்சைச்சாறு கலந்து, துவையல் (அ) குருமாவுடன் பரிமாறவும். வயதுக்கு வந்தப் பெண்களின் உடலை உறுதியாக்கும் உணவு இது!
ஆறு வற்றல குழம்பு
- தேவையானவை: சுண்டை வற்றல், மணத்தக்காளி வற்றல் - தலா 4 ஸ்பூன், மாங்காய் வற்றல் - 10, கொத்தவரங்காய் வற்றல் - 2 கைப்பிடி, கத்தரிக்காய் வற்றல் - ஒரு கைப்பிடி, பாகற்காய் வற்றல் - 3 ஸ்பூன், தாளிப்பு வடகம் - 5 ஸ்பூன், கடுகு, தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன், சாம்பார் பொடி - ஒரு ஸ்பூன், நல்லெண்ணெய் - 150 கிராம், உப்பு, புளி - தேவையான அளவு.
செய்முறை: புளியை ஊற வைத்து கரைக்கவும். கொதிக்கும் வெந்நீரில் மாங்காய் வற்றல், கொத்தவரங்காய் வற்றல், கத்தரிக்காய் வற்றல், பாகற்காய் வற்றல் இவற்றை ஊற வைக்கவும். கல்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சுண்டை வற்றல், மணத்தக்காளி வற்றலை போட்டு நிறம் மாறும் வரை பொரிக்கவும். அதனுடன் தாளிப்பு வடகத்தை சேர்த்து வதக்கவும். பின்னர் கடுகை போட்டு பொரித்து, தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாம்பார் பொடியை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி, புளிக்கரைசல் ஊற்றி கொதிக்க விடவும். வெந்நீரில் ஊறவைத்துள்ள வற்றல் வகைகளை நன்றாக வடிகட்டி, கொதிக்கும் குழம்பில் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்க விடவும். குழம்பு லேசாக கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக