மல்லி-தினை பெசரெட்
தேவையானவை:
தினை, கொத்துமல்லித்தழை தலா ஒரு கப், பாசிப்பருப்பு ஒன்றரை கப், வெங்காயம்
ஒன்று, இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 5. உப்பு, எண்ணெய்
தேவையான அளவு.
செய்முறை: தினை, பருப்பு இரண்டையும் முதல் நாள் இரவே ஊற விடவும், வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். ஊற வைத்த தினை, பாசிப்பருப்பு இரண்டையும் மிக்ஸியில் போட்டு, அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித்துருவல், நறுக்கிய வெங்காயம், சுத்தம் செய்த கொத்துமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவும், பின்னர் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை காய வைத்து, அரைத்த மாவை சற்று கனமான தோசையாக வார்த்து, கற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் நன்றாக வேக வைத்து எடுக்கவும். இந்த மாவை புளிக்க வைக்க வேண்டாம். அரைத்ததும் அப்படியே தோசை வார்க்கலாம்.
மல்லி உசிலி
தேவையானவை: கொத்துமல்லித்தழை - ஒரு கப், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு - தலா 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உப்பு, பெருங்காயம் - தேவையான அளவு.
செய்முறை:
பருப்பு வகைகளை பத்து நிமிடம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம், சுத்தம் செய்த கொத்துமல்லித்தழை சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவும். இந்தக் கலவையை சிறிய வடைகளாக தட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். பின்னர் அவற்றை உதிர்த்து தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் உதிர்த்து வைத்துள்ள கலவையைச் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
மல்லி-ஆலு டிக்கி
தேவையானவை: உருளைக்கிழங்கு - 4.வாழைக்காய் ஒன்று, வெங்காயம் 2, கொத்துமல்லித்தழை ஒரு கட்டு, பச்சை மிளகாய் -4, கரம் மசாலாத்தூள், தனியாத்தூள், இஞ்சித் துருவல் - தலா ஒரு டீஸ்பூன். ரொட்டித்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
* செய்முறை:
உருளைக்கிழங்கு, வாழைக்காய் இரண்டையும் தனித்தனியாக வேக வைத்து தோலை நீக்கி மசிக்கவும், வெங்காயத்தை பொடியாக நறுக்கி, பொன்னிறமாக வதக்கி வைக்கவும். அகலமான பாத்திரம் ஒன்றில் உருளை, வாழை மசித்த கலவை, வதக்கிய வெங்காயம், உப்பு, கொத்துமல்லித்தழை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், தனியாத்தூள், கரம் மசாலாத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக பிசையவும். இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி, வடை போல தட்டி, ரொட்டித்தூளில் புரட்டி எடுக்கவும். பின்னர் இதை நன்றாக காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். ஹெல்தியான இந்த ஈவினிங் ஸ்நாக்கை சாஸுடன் சாப்பிடலாம்!
கருத்துகள்
கருத்துரையிடுக