வேர்க்கடலை குருமா
தேவையானவை: மேல் தோல் உரித்த பச்சை வேர்க்கடலை 2 கப், உப்பு தேவைக்கு, கேரட் துருவல் - 4 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், தக்காளி, பெரிய வெங்காயம் தலா ஒன்று, பெருங்காயம்
அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் 2, எண்ணெய், பொட்டுக்கடலை மாவு, நறுக்கிய கொத்துமல்லித்தழை - தலா 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: பச்சை வேர்க்கடலையை 2 மணி நேரம் நீரில் ஊறவைத்து, அளவான நீர் விட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் பெருங்காயம், மஞ்சள்தூள், கேரட் துருவல் சேர்த்து வதக்கி, வெந்த வேர்க்கடலையை நீருடன் சேர்த்து இரண்டு கொதி விடவும். பின்னர் பொட்டுக்கடலை மாவுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் நீர் விட்டு கரைத்து, கொதிக்கும் கலவையில் ஊற்றி, நன்றாக கலந்து விடவும். மறுபடியும் இரண்டு கொதி வந்ததும், கொத்துமல்லித்தழைத் தூவி இறக்கவும்.
குறிப்பு: தேங்காய் சேர்க்காததால் இந்த குருமா விரைவில் கெடாது. காலையில் செய்தால் மதியம் வரை நன்றாக இருக்கும். சப்பாத்தி / பரோட்டாவுக்கு ஏற்றது.
சுரைக்காய் குருமா
தேவையானவை: தோல் நீக்கி நறுக்கிய சுரைக்காய் - 2 கப், தக்காளி, பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் தலா 2, இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன். மசாலா பவுடர்கள்: மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள், கரம் மசாலா தலா ஒரு டீஸ்பூன், தனியா பவுடர் 2 டீஸ்பூன். அரைக்க: தேங்காய்த்துருவல் கால் கப், கசகசா, சோம்பு - தலா கால் டீஸ்பூன், உடைத்த முந்திரித் துண்டுகள் ஒரு டேபிள் ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை 2 டேபிள் ஸ்பூன். மேலே தூவி அலங்கரிக்க: கசூரி மேத்தி - ஒரு டேபிள் ஸ்பூன்.
செய்முறை: வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய சுரைக்காயைப் பொரித்து எடுத்து தனியே வைக்கவும். அதே எண்ணெயில், மெலிதாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, அனைத்து மசாலா பவுடர்களையும் சேர்த்து வதக்கி, பொரித்த சுரைக்காயைச் சேர்த்து, அரை கப் நீர் விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து, இரண்டு மூன்று கொதிகள் விடவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துச் சேர்த்து, மறுபடியும் இரண்டு கொதிகள் விட்டு இறக்கி, கசூரி மேத்தி தூவவும்.
குறிப்பு: ரொட்டி / சப்பாத்தியுடன் சாப்பிட ஏற்ற குருமா இது.
கருத்துகள்
கருத்துரையிடுக