வெஜிடபுள் பரோட்டா
with
நெல்லிக்காய் ஜூஸ்
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், துருவிய முட்டைக் கோஸ் -ஒரு கப், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழை, நெய் தலா கால் கப், சோள மாவு 2 டீஸ்பூன், தனியாத்தூள், மிளகாய்த்தூள் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் -தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவு, சோளமாவுடன் சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, சிறிது நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய மு.கோஸ், கேரட், த.தூள், மி.தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். காய்கள் வெந்ததும் கொ.ம.தழை தூவி கிளறி இறக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை சற்று பெரிய உருண்டைகளாக உருட்டி வட்டமாக இட்டு அதன் நடுவில் வதக்கிய காய்கறிக் கலவையை வைத்து, மூடி, பிறகு மெல்லிய வட்டங்களாக தட்டிக் கொள்ளவும். இதை காய்ந்த தவாவில் போட்டு சுற்றிலும் நெய் விட்டு திருப்பிப் போட்டு சிவக்க வந்ததும் எடுத்து பரிமாறவும். இதற்கு தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை.
நெல்லிக்காய் ஜூஸ்
தேவையானவை: பெரிய சைஸ் நெல்லிக்காய் - ஒரு கிலோ, பனை வெல்லம் - முக்கால் கிலோ, ஏலக்காய், ஓமம், திப்பிலி, பட்டை - தலா 5 கிராம்.
செய்முறை: நெல்லிக்காயை நன்றாகக் கழுவி ஈரம் போக துணியில் ஒற்றி எடுக்கவும். ஏலக்காய், ஓமம், திப்பிலி, பட்டை பொடித்துக் கொள்ளவும். சுத்தமான ஜாடியில் நெல்லிக்காயை முதலில் போட்டு, அதன் மேல் பனைவெல்லம் போடவும். இப்படி மாறி, மாறி நெல்லிக்காய், பனைவெல்லம் வருவதுபோல் ஜாடியை நிரப்பி, இறுதியாக பொடித்த பொடியை சேர்த்து மூடவும். இதை 5 நாட்களுக்கு ஒரு முறை கிளறிவிட்டு 30 நாட்கள் வரை வைத்திருந்தால் நெல்லிச்சாறு முழுவதும் வெல்லத்தில் இறங்கி, நெல்லிக்காய் சக்கையாக மிதக்கும். பின்னர் அதை வடிகட்டி சக்கையை எடுத்து அந்த சாற்றை சுத்தமான வேறொரு பாட்டிலில் ஊற்றி மூடி வைத்துவிடவும். இதை காலையில் ஒரு டீஸ்பூன் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளித் தொந்தரவு இருக்காது. வீட்டிற்கு விருந்தினர்கள் வரும்போது ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் நெல்லிச் சாறு சேர்த்து ஜூஸ் மாதிரி கொடுக்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக