அடை மிக்ஸ்
தேவையானவை: இட்லி அசிரி - 100 கிராம், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா 75 கிராம், உளுந்தம்பருப்பு - 25 கிராம், பச்சரிசி - 50 கிராம், காய்ந்தமிளகாய் - 6, பெருங்காயம், கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கறிவேப்பிலையை கழுவி, துளியும் ஈரம் இல்லாமல் உலர்த்தி, வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும். இட்லி அரிசி, பச்சரிசி, பருப்பு வகைகள் உப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயம், வறுத்த கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மெஷினில் கொடுத்து, சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை: தேவையான அளவு அடை மிக்ஸை எடுத்துக் கொண்டு, அதை 10 நிமிடம் ஊற வைத்து கரைத்துக் கொண்டு, வழக்கமான முறையில் அடை வார்க்கலாம்.
ஸ்பெஷல் குழம்பு
தேவையானவை: காய்ந்த மிளகாய் - 5, தனியா - 3 டேபிள் ஸ்பூன், மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், ஓமம் - ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் 6,பூண்டு 15 பல், புளி - எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய் ஒரு குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியை நீரில் ஊற வைத்து கெட்டியாக கரைக்கவும். அதில் உப்பை சேர்க்கவும். பூண்டு பற்களை உரித்து 10 பற்களை வைத்துவிட்டு மீதியை அரைத்துக் கொள்ளவும். மேலே சொன்ன பொருட்களில் எண்ணெய், உப்பைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்து விழுதாக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், பூண்டை வதக்கவும். புளிக்கரைசலுடன் அரைத்த விழுதை கலந்து, வதக்கிய பூண்டுடன் சேர்க்கவும். நன்கு கொதித்து கலவை கெட்டியாகி, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். இந்தக் குழம்பை சூடான சாதத்தில் ஊற்றி நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால், ஜலதோஷம், உடல்வலி ஓடிப் போகும்!
கருத்துகள்
கருத்துரையிடுக